மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டம், பத்ஃபரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரன்வீர் சிங் (39). டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனினும் சொந்த ஊருக்கு செல்வதில் உறுதியாக இருந்து ரன்வீர், டெல்லியில் இருந்து 285 கி.மீ. தொலைவில் உள்ள தனது கிராமத்துக்கு வியாழக்கிழமை காலை நடக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை 2-ல் நேற்று முன்தினம் மாலை கிட்டத்தட்ட ஆக்ரா வரை 200 கி.மீ. வரை சென்ற பிறகு, சோர்வடைந்து கீழே விழுந்தார். அருகிலிருந்த கடைக்காரர் அவரை தூக்கி அழைத்து வந்து டீ, பிஸ்கெட் கொடுத்துள்ளார். இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறிய ரன்வீர், தனது சகோதரருடன் போனில் பேசினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த ரன்வீர் சிங்குக்கு 2 மகள்கள் உட்பட 3 குழந்தைகள் உள்ளன.