கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மூத்த அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் அவரது தலைமையில் மூத்த அமைச்சர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து இன்றி தவித்து வரும் பிரச்சினை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.