கோவாவில் சாலையில் செல்பவரை மடக்கும் சிஆர்பிஎஃப் படை வீரர்கள். 
இந்தியா

கோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை

ஐஏஎன்எஸ்

லாக்-டவுன் காலத்தில் மக்கள் வெளியே பொது இடங்களில் சுற்றித் திரிந்து நோயைப் பரப்பி, பீதியை ஏற்படுத்தாமல் இருக்க கோவாவுக்கு துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டதாகவும் இன்று முதல் அவர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்வர் ப்ரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 31 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார்.

லாக்-டவுன் தொடங்கி 5 ஆம் நாளான இன்று கோவாவில் களமிறங்கியுள்ள துணை ராணுவப்படை பனாஜி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கிய இடங்களில் பணியாற்றும். கோவா முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிஆர்பிஎஃப் படையினரை அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் ஊடகங்களிடம் கூறியதாவது:

''கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வைராலஜி ஆய்வகத்திலேயே இனி கரோனா வைரஸ் சோதனை ஆய்வுகள் நடத்தப்படும். இம்மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை முதல் அறிக்கைகளைத் தரத் தொடங்கும். இப்போதைக்கு, எங்களிடம் சோதனைக்கு 2,500 கருவிகள் உள்ளன.

தற்போது கோவாவில் மூன்று பேருக்கு கோவிட்-19 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாநிலம் முழுவதும் 798 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்பவர்கள் கடைகளுக்கு வெளியே சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மாறாக நோய் பரவும் வகையில் பீதியை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க துணை ராணுவப் படையை உள்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது 240 பேர் அடங்கிய சிஆர்பிஎஃப் வந்துள்ளனர். இவர்கள் கோவா முழுவதும் முக்கியமான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் படையினர் இன்று முதல் கோவா போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

லாக்-டவுனை மீறி தேவையற்ற முறையில் சாலைகளில் சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையான சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லாக்-டவுனின்போது நிலைமையைக் கண்காணிக்க அரசாங்கம் ஏற்கெனவே முதன்மை வனத்துறை தலைமைப் பாதுகாவலர் அலுவலகத்தில் ஒரு போர் அறையை அமைத்துள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி வரை தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை''.

இவ்வாறு கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT