டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்: கோப்புப்படம் 
இந்தியா

சொந்த ஊர்களுக்குச் செல்லாதீர்கள்: கூட்டம் கூட்டமாக நகரும் தொழிலாளர்களுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள்

பிடிஐ

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்ல வேண்டாம், தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த மக்கள் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளனர்.

டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கூட்டமாகக் காத்திருக்கும் தொழிலாளர்கள்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக விலக்கல் அவசியம் என்பதாலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது கரோனா வைரஸ் நோய்த் தொற்றை வரவேற்கும் விதமாக இருந்து வருகிறது.

இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் போதுமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உத்தரப் பிரதேச அரசு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் தங்கி இருக்கும் மக்களுக்குத் தேவையான தங்குமிடங்களும், உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியேறும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில், “ புலம்பெயர் தொழிலாளர்கள் தயவுசெய்து எங்கு தங்கி இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். கூட்டமாகச் சென்றால், கரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகமான வாய்ப்பை உருவாக்கும்.

டெல்லி அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உணவு, தங்குமிடம் போன்ற போதுமான வசதிகளையும் செய்து கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன். நாட்டின் நலனுக்காக உங்கள் கிராமத்துக்குச் செல்லாதீர்கள்.

கரோனா வைரஸ் உங்கள் கிராமத்தையும், உங்கள் குடும்பத்தையும் தொற்றிக்கொள்ளும். நாடு முழுவதும் பரவக் காரணமாகிவிடும். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவது கடினமாகும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள கவுதம் புத்தநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், “ தொழிற்சாலை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவருக்கு ஊதியத்தைப் பிடிக்கக் கூடாது. 28 நாட்களுக்கான ஊதியத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT