உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கவுஷாம்பி நகர பேருந்து நிலையத்துக்குள் நுழைவதற்காக வரிசையில் காத்திருந்த தொழிலாளர்கள்.படம்: சந்தீப் சக்சேனா 
இந்தியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி - உ.பி. எல்லையில் தவிப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் டெல்லி - உ.பி. எல்லையில் தவிக்கின்றனர். அவர்களை மத்திய அரசு இப்படி தவிக்க விடுவது மிகப்பெரிய குற்றம்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் 21 நாட்கள் முழு அடைப்பு அமலில் உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. இதனால் புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் எல்லைகளில் தவிக்கின்றனர்.

குறிப்பாக டெல்லி - உத்தர பிரதேசத்தின் காசிபூர் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘மாநில எல்லைகளில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லாதபடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை இதுபோல் செய்வது மிகப்பெரிய குற்றம்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தொழிலாளர்கள் எல்லையில் தவிக்கும் புகைப்படங்களையும் ட்விட்டரில் இணைத்துள்ளார்.

ட்விட்டரில் ராகுல் மேலும் கூறும்போது, ‘‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது சகோதர, சகோதரிகளுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கிடைக்க வேண்டும். இந்தப் பிரச்சினை பெரிதாக மாறுவதற்குள் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று சேர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு வர விமானங்களை அனுப்பி வைத்த மத்திய அரசு, உள்நாட்டில் தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்யாதது ஏன்’’என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கிடையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT