மும்பை நகரம் கரோனா சவாலை எதிர்கொள்வதில் போராடி வருகிறது. சமூக விலகல் சாத்தியமே இல்லாத அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குடிசை வாழ் பகுதிகளிலும் புதிய அபாயமாக மும்பையில் பரவியுள்ளது.
எம் ஈஸ்ட்வர்ட் பகுதி குடிசை வாழ்பகுதியில் 10 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. இதில் இன்னொரு சிக்கல் என்னவெனில் இவர்களுக்கு எங்கிருந்து தொற்றியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் நலிவுற்றோர் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் நெரிசலான பகுதி என்பதால் இந்த 10 பேரின் தொடர்பு வரலாற்றைத் தடம் காண்பது மிகமிகக் கடினம் என்கின்றனர் அதிகாரிகள், எம் ஈஸ்ட்வர்ட் என்பது கோவந்தி, தியோனார், பைகன்வாடி, மன்குர்த், ஷிவாஜி நகர், சீட்டா கேம்ப், செம்பூரில் ஒரு பகுதி ஆகியவை அடங்கியதாகும்.
மார்ச் 23ம் தேதி கோவந்தியைச் சேர்ந்த 48 வயது நபர் முதலில் கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டார். இவர் கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை நாடுகளுக்குச் சென்று திரும்பியவர். இவர் தினசரி மசூதி செல்பவர், இந்த மசூதியும் தற்போது மூடப்பட்டது. லோட்டஸ் காலனியில் இவர் நமாஸ் செய்வது வழக்கம் அங்கு ஒருவருக்கு கரோனா பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
சீட்டா கேம்ப் பகுதியில் ஒரு நபர் துபாயிலிருந்து திரும்பி வந்தவர் கரோனாவின் பிடியில் சிக்கியுள்ளார், கோவந்தியில் கடும் உடல்நிலைக் கோளாறினால் இறந்த 65 வயது மூதாட்டிக்கு கரோனா பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேர்களில் ஒருவரது தொடர்பு வரலாறு மட்டும் தடம் காண முடியவில்லை.
பயனளிக்காத லாக்-டவுன்:
குடிசை வாழ் பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருக்கும். இதனால் பாசிட்டிவ் நோயாளிகள் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.. லாக்-டவுன் இந்தப் பகுதிகளில் பயனளிக்கவில்லை அனைவரும் வீட்டுக்கு வெளியே கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். போலீஸார் சொல்லியும் இவர்கள் கேட்பதில்லை. ஜம்ப்லிபாதா சேரியில் இத்தாலியிலிருந்து திரும்பிய நபருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது, இவர் ஒரு உள்ளூர் மருத்துவரை ஆலோசித்தார், அந்த மருத்துவருக்கும் கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. இவருடன் தொடர்பிலிருந்த 57 பேர்களையும் தற்போது டெஸ்ட்டுக்கு அனுப்பியுள்ளனர். இத்தாலியிலிருந்து வந்த அந்த நபர் மருத்துவரை மார்ச் 19ம் தேதி பார்த்துள்ளார். அந்த மருத்துவர் மார்ச் 23ம் தேதி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிறு மருத்துவமனைக்கும் அவர் சென்று நோயாளிகளைப் பார்த்துள்ளார்.
இதே போல் கிழக்கு புறநகர்ப்பகுதி, மற்றும் மேற்குப் புறநகர் உள்ள வீட்டுப்பணியாள் இருவருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.