வாரணாசியிலிருந்து பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். 
இந்தியா

திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சரியாகத் திட்டமிடப்படாமல் திடீரென லாக் டவுன் அறிவிக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைகீழ் இடம்பெயர்வுக்குக் காரணமாகிவிட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நகர்ப்புற மையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் பலர் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதால், திடீரென ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் அன்று பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 21 நாள் லாக் டவுனை அறிவித்தார். இதனை அடுத்து கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. எனினும் பல இடங்களில் மக்கள் போதிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கூறியுள்ளதாவது:

''சரியான திட்டமிடல் இல்லாமல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் குடிமக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட வாழ்க்கையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நகர்ப்புற மையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் பலர் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதால், திடீரென ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விநியோகச் சங்கிலி அறுந்தது. மக்களை நடத்துவது குறித்து காவல் துறைக்கு தவறான அறிவுறுத்தல்கள் என பல்வேறு பிரச்சினைகளை லாக் டவுன் உருவாக்கியுள்ளது.

வேறுபட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இதை அரசாங்கம் முக்கியமாக கவனிக்க வேண்டும். இதற்கிடையே உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளன.

எனினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதற்கான முதல் எச்சரிக்கையை கடந்த பிப்ரவரி மாதமே எழுப்பியபோதிலும் அரசாங்கம் நேரத்தை வீணாக்கிவிட்டது.

பாஜக சரியாக திட்டமிடாததாலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியிலும் வீடற்றும் தவித்து வருகிறார்கள். மக்களுக்கு உதவும் இலக்குகளை சரியாக வகுத்த பின்னரே தேசிய அளவிலான லாக் டவுனை அறிவித்திருக்க வேண்டும்.

ஏழை மக்கள் பசியைப் போக்க 1.7 லட்சம் கோடியை அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவானதாகும். இந்த நேரத்தில் தேவை என்பது மிகமிக அதிகமாகும்''.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT