லாக் டவுன் காலத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு தேவையான பொருட்களைக் கொண்டுசெல்ல சிறப்பு சரக்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கும் என்று விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
உலகில் 5 லட்சம் பேரைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவியுள்ள நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள் லாக் டவுனை அறிவித்தார்.
பொது அவசரநிலை காலத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மெல்ல மெல்ல உறுதி செய்யப்பட்டு வருகிறது.
ரயில் சேவையின் தாமதம்
மலைப்பாங்கான வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல வடகிழக்கு எல்லை ரயில்வே (என்.எஃப்.ஆர்) அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது.
வடகிழக்கு மலை மாநிலங்களைத் தவிர, மேற்கு வங்கத்தின் ஏழு மாவட்டங்களிலும், வடக்கு பிஹாரில் ஐந்து மாவட்டங்களிலும் ரயில் பாதைகளை விரிவுபடுத்துவதும், ரயில் சேவையை பராமரிப்பதும் வடகிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு பொறுப்பு உண்டு. எனினும் இப்பணிகளில் ரயில்கள் இயக்கப்படுவதில் சற்றே தாமதமாவதாக கூறப்படுகிது.
வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வடகிழக்கு மாநிலங்களில் சரக்கு ரயில்களை இயக்கி வருகிறோம். ஆனால் பல்வேறு பொருட்கள் மற்றும் கார்கோக்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் சில சிக்கல்கள் உள்ளன, ஏனெனில் லாக் டவுன் காரணமாகவும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தற்கான சமூக இடைவெளி பராமரிப்பு காரணமாகவும் தொழிலாளர்கள் கிடைப்பது ஒரு சிக்கலாகியுள்ளது. அதனாலேயே ரயில் சேவை சற்றே தாமதப்படுகிறது'' என்றார்.
இந்நிலையில் மக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு சரக்கு விமானங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) பிராந்திய நிர்வாக இயக்குநர் (என்இஆர்) சஞ்சீவ் ஜிண்டால் இன்று கூறியதாவது:
''கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்குத் தேவையான மருந்து, மருத்துவ அவசர உபகரணங்கள், மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள், சிறிய அளவிலான பொருட்களைக் கொண்டுசெல்வது, இரண்டாவது கிழக்கு பிராந்திய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், தண்ணீர் கூட எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளோம்.
அவசரத் தேவையை கருத்தில் கொண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது. விமான சரக்குகளின் தடையற்ற இயக்கத்திற்குத் தீர்வு காண, பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் செயலாளர்களுடன் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தடையின்றி வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஏர் இந்தியா தனது சேவையைத் தொடங்கும்''.
இவ்வாறு சஞ்சீவ் ஜிண்டால் தெரிவித்தார்.