இந்தியா

நாசிக் கும்ப மேளா விழாவில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்: பக்தர்கள் வருகை குறைவு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் கில் நடைபெற்று வரும் கும்ப மேளா விழாவின் முதல் புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று கோலா கலமாக தொடங்கியது. இதை யொட்டி சாதுக்கள் உட்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடினர்.

நேற்று காலை 7.15 மணிக்கு அனைத்து இந்திய அகதா பரிஷத் தலைவர் கியான்தாஸ் மஹராஜ் தலைமையில் நிர்வானி அகதா பிரிவைச் சேர்ந்த சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ராம் குந்த் பகுதியில் புனித நீராடினர்.

அடுத்தபடியாக 8 மணிக்கு கிருஷ்ணதாஸ் மஹராஜ் தலைமையில் திகம்பர் அகதா பிரிவைச் சேர்ந்த சாதுக்கள் புனித நீராடினர். மூன்றாவதாக 9.30 மணிக்கு நிர்மோஹி அகதா பிரிவைச் சேர்ந்த சாதுக்கள் புனித நீராடினர்.

முன்னதாக, 3 அகதாக்களும் தபோவனத்தில் உள்ள லட்சுமி நாராயணன் கோயிலிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது பேரணியாக ராம்குந்த் பகுதிக்கு வந்தனர். அப்போது மேள தாளங்கள் இசைக்கப்பட்டன.

இவர்களுக்கு மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன், கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் தாதா புசே, மாநகர மேயர் அசோக் முர்தடக், துணை மேயர் குர்மீத் சிங் பகா, மண்டல ஆணையர், மாவட்ட ஆட்சியர், நாசிக் ஆணையர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர்.

பக்தர்கள் புனித நீராடும்போது நீரில் யாராவது மூழ்கினால் அவர்களை காப்பாறுவதற்காக நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்க நாசிக் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. புனித நீராடல் நிகழ்ச்சியை முன்னிட்டு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரிம்பகேஷ்வர் நகரில் உள்ள குஷ்வர்த்த தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் புனித நீராடினர். அங்கு நேற்ற லேசான மழைத்தூறல் காணப்பட்டது.

பக்தர்கள் வருகை குறைவு

நாசிக்கில் உற்பத்தியாகும் கோதாவரி ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட இடத்தில் புனித நீராடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைவு என நாசிக் துணை மேயர் குர்மீத் சிங் பகா தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற போராட்டமே பக்தர்கள் வருகை குறைந்ததற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ரக்ஷா பந்தன் விழாவும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

கும்பமேளாவின் 2-வது புனித நீராடல் செப்டம்பர் 13-ம் தேதியும் 3-வது புனித நீராடல் 18-ம் தேதியும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT