ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3-வது நோயாளி, சட்டப்பேரவை ஊழியர்களுடன் பழகினார். இதனால் சட்டப்பேரவை ஊழியர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்குமாறு சபாநாயகர் எஸ்.எஸ்.பட்ரோ உத்தரவிட்டார்.
ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3-வதாக பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர், ஒடிசா சட்டப்பேரவையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சென்றார்.
அவருடன் பேரவை ஊழியர் ஒருவர் பேசியது தெரியவந்ததால், அனைவரும் சுய தனிமைக்குச் செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து சபாநாயகர் எஸ்.எஸ்.பட்ரோ இன்று கூறுகையில், “கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காரணமாக கடந்த 13-ம் தேதியே சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மட்டும் நிறைவேற்ற இருந்தது.
ஆனால், மாநிலத்தில் 3-வதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி சட்டப்பேரவை மருத்துவனைக்கு வந்து, ஊழியர் ஒருவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, பேரவை ஊழியர்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் 14 நாட்களுக்கு சுய தனிமைக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன்.
சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்பதால், வரும் 30-ம் தேதி நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடர் லோக்சேவா பவனில் நடக்கும்.
அந்தக் கூட்டத்துக்கு வரும் எம்எல்ஏக்கள் அனைவரும் 2 மீட்டர் இடைவெளிவிட்டுதான் பேச வேண்டும், அமர வேண்டும். அனைத்துக் கட்சிகளும் தங்களின் 30 சதவீத எம்எல்ஏக்களை மட்டும் அனுப்பினால் போதுமானது.
கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் யாரும் எம்எல்ஏக்களின் வாகனங்களைத் தடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.