இஸ்லாமிய மக்கள் இன்று வீடுகளிலேயே அரசு அறிவுறுத்தபடி சமூக விலக்கலை கடைபிடித்து போதிய இடைவெளி விட்டு தொழுகை நடத்தினர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்திலும் வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் இருந்து வழிபாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமையான இன்று நாட்டின் முன்னணி மசூதிகளில் இன்று ஜூம்மா தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்த வேண்டும் என டெல்லி ஜூம்மா மசூதி இமாம் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இஸ்லாமிய மக்கள் வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தினர். சில வீடுகளில் இருந்தவர்கள் கூட்டுத்தொழுகை நடத்தினர். இருப்பினும் அரசு அறிவுறுத்தபடியே சமூக விலக்கலை கடைபிடித்து போதிய இடைவெளி விட்டு தொழுகை நடத்தினர்.