இந்தியா

கரோனா தடுப்பு: ஆயிரக்கணக்கில் தன்னார்வலர்கள் ஈடுபாடு; நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதிவு எண்ணிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மேலாண்மையின் அதிகாரபூர்வ என்டிஎம்ஏ இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதற்காக முன்வரும் இளைஞர்கள் எண்ணிக்கையின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியுள்ள நிலையில் அதன் பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும்வகையில் பல்வேறு மாநிலங்களும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றிலிருந்து பரவலைத் தடுப்பதற்கான மாபெரும் முயற்சியாக பிரதமர் மோடி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அறிவித்துள்ளார்.

இதன் இன்னொரு பகுதியாக கரோனா வைரஸைத் தடுப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) மேற்கொண்டு வருகிறது.

என்டிஎம்ஏ தனது வலைத்தளத்தின் இணைப்பு மூலம் கரோனா தடுப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள சுகாதாரம், தகவல் தொடர்பு, தொழில் முனைவோர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகிய துறைகளில் உள்ள தன்னார்வலர்களை அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட் 19 பரவுவதற்கு எதிரான போராட்டத்திற்காக கிட்டத்தட்ட 27,000 தனிநபர்களும் 1,100 க்கும் மேற்பட்ட அமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (என்.டி.எம்.ஏ) தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு எட்டுமணி வரை இந்த எண்ணிக்கை 26,736 ஆகம்வும் மற்றும் நிறுவனங்கள் 1,123 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

இதற்கான பணிகள் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. இதில் சேர விரும்பும் தொண்டர்கள் என்.டி.எம்.ஏ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் பதிவு செய்யப்படுகிறார்கள்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா வைரஸைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) ஈடுபட்டு வருகிறது. இதில் இணைந்துகொள்ள ஆர்வத்தோடு வரும் தன்னார்வலர்களை என்டிஎம்ஏ பல்வேறு துறைகளில் பங்களிப்பு ஆற்ற என்டிஎம்ஏ இணையதளம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சுகாதாரம், தகவல் தொடர்பு, தொழில் முனைவோர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகிய துறைகளில் பங்கேற்கலாம். இதுகுறித்த தகவல்களும் பதிவு செய்துகொண்ட தன்னார்வலர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பதிவு செய்து கொண்ட தன்னார்வலர்கள் துணை மருத்துவப் பணிகள், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுதல், முதியவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல், இறந்த உடல்களை நிர்வகித்தல் மற்றும் நோயாளிகளின் போக்குவரத்து தொடர்பான பணிகளுக்கு உதவி புரியலாம்.

சுகாதார நடைமுறைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூக தொலைதூர நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், சமூகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், மற்றும் ஹெல்ப்லைன்களை நிர்வகிப்பதைத் தவிர, குடியுரிமை நலச் சங்கங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பல்வேறு மத இடங்களில் பணிபுரியவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

தொழில்முனைவோர் பணியின் ஒரு பகுதியாக, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), முகக்கவசங்கள், சானிடிசர்கள் மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும், தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதற்கும் உதவி கோரப்பட்டுள்ளது.

"அத்தியாவசிய சேவைகள்" பிரிவின் கீழ், தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகள், கிருமி நீக்கம் மற்றும் துப்புரவு சேவைகள், வீட்டுக்கு வீடு தகவல் மற்றும் சேவை மேலாண்மை ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகத்திற்கு தன்னார்வலர்கள் உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT