80-களின் இறுதியில் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் பார்த்து ரசித்த ராமாயணம் மெகா தொடர், சனிக்கிழமை முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.
ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஜனவரி 1987-ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த ராமாயணம் தொடர் ஜூலை மாதம் வரை தொடர்ந்து மொத்தம் 78 பகுதிகள் என ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்துள்ளதாகக் கூறப்பட்டது. இது அன்றைய நாட்களில் ஒரு சாதனையாகும். ராமாயணம் தொடரின் வெற்றி குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
21 நாள் ஊரடங்கை அடுத்து மக்களின் தொடர் கோரிக்கையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
"மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து நாளை, சனிக்கிழமை, மார்ச் 28-ம் தேதி முதல், டிடி நேஷனல் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இன்னொரு பகுதி இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும்" என்று ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.
ஏற்கெனவே இந்தத் தொடர் பலமுறை தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.