இந்தியா

ஷீனா போராவைக் கொன்றது யார்?- இந்திராணியும் சஞ்சீவ் கண்ணாவும் பரஸ்பரம் புகார்

செய்திப்பிரிவு

எனது மகள் ஷீனா போராவை வெறுத்தது உண்மை, ஆனால் நான் கொலை செய்யவில்லை என்று பெண் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாயார் இந்திராணியிடம் மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னாவிடமும் தனியாக விசாரணை நடைபெறுகிறது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. இந்திராணி முகர்ஜி கூறும்போது, “எனது மகள் ஷீனா போராவை வெறுத்தது உண்மைதான், ஆனால் அவரை நான் கொலை செய்யவில்லை, சஞ்சீவ் கண்ணாதான் கொலை செய்தார்” என்றார்.

சஞ்சீவ் கண்ணா போலீஸாரிடம் கூறும்போது, “எனக்கு நிதியுதவி செய்வதாக இந்திராணி ஆசை காட்டினார், அவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம், அவரால்தான் வழக்கில் சிக்கிக் கொண்டேன்” என்றார்.

இந்திராணிக்கும் அவரது மகள் ஷீனா போரா, மகன் மைக்கேல் போரா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அவை குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் மைக்கேல் போராவிடம் நடத்திய விசாரணையில், அவர் சில மாதங்கள் புணேவில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும், அதற்கான ஏற்பாடுகளை அவரது தாயார் இந்திராணி செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

நடித்து காட்டச் சொல்வது ஏன்?

வழக்கறிஞர் கே.பாலு கூறும்போது “ஒரு குற்ற சம்பவத்தை நேரடியாக பார்த்த சாட்சிகள் இல்லாத பட்சத்தில், குற்றம் செய்த நபரையே நடித்துக் காட்ட வைத்து, சம்பவம் நடந்த விதத்தை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்” என்றார்.

காவல் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன் கூறும்போது, “ஒரு கொலை சம்பவத்தை விசாரிக்கும் விசாரணை அதிகாரிக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களுக்குமான விடை, அந்த குற்றத்தை செய்த நபர் நடித்துக் காட்டும்போது மட்டும்தான் கிடைக்கும். வழக்குப் பதிவு மற்றும் குற்றப்பத்திரிகை தயார் செய்வதற்கு இது பெரிதும் உதவும். நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கேட்கும் குறுக்கு கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் சொல்லவும் உதவும்.

வடசென்னையில் பலாத்கார முயற்சியில் மயங்கிய பெண்ணை, தோளில் தூக்கிக் கொண்டு வந்து ரயில்வே தண்டவாளத்தில் போட்டு கொலை செய்தார் ஒரு நபர். இவரால் அந்த பெண்ணை தூக்கியிருக்க முடியுமா? என்ற சந்தேகத்திற்கான விடை அவர் நடித்துக் காட்டும்போதுதான் தெரிந்தது. அந்த பெண்ணின் எடையை ஒத்த மற்றொருவரை நடித்துக் காட்டும்போது தூக்க வைத்து இதை உறுதி செய்தோம்.

கீழ்ப்பாக்கம் பெண் மருத்துவர் கொலையில் 22 வயது நபரால் இதை செய்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கும் அவர் நடித்துக் காட்டிய பின்னரே நம்ப முடிந்தது.

சிறுசேரியில் டிசிஎஸ் பெண் இன்ஜினீயரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள் நடித்துக் காட்டிய பின்னர்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. தூக்கில் போடப்பட்ட ஆட்டோ சங்கரும் தான் செய்த கொலைகள், அவற்றை மறைத்த விதம் குறித்து நடித்துக் காட்டியபோது போலீஸாரே வியந்து விட்டனர்.

குற்றம் செய்த நபரை நடித்துக் காட்ட வைத்து அவற்றை வீடியோ எடுத்து நீதிபதிக்கு போட்டு காண்பிக்கும்போது நடந்த சம்பவங்களை நீதிபதியாலும் மனதுக்குள் காட்சிப்படுத்த முடியும். இதன் மூலம் குற்றவாளிக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT