கரோனா பாதிப்பு காரணமாக குஜராத்தில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணத்தை மே 15-ம் தேதி வரை செலுத்தலாம் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், கரோனா பாதிப்பு காரணமாக குஜராத்தில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணத்தை மே 15-ம் தேதி வரை செலுத்தலாம் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் தற்போது பயன்பாடுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும் முதல்கட்ட நிரந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிரந்தர கட்டத்திற்கு பதிலாக தொழிற்சாலைகள் பயன்பாட்டின் அளவை பொறுத்து கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.