வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்களுக்கு தாவி தாவிச் செல்லும் விநோத தண்டனையை ராஜஸ்தான் போலீஸார் வழங்கினர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் விதிமுறையை மீறி வெளியே உலாவும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அத்தகைய இளைஞர்களுக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்களுக்கு தாவி தாவிச் செல்லும் விநோத தண்டனையை ராஜஸ்தான் போலீஸார் வழங்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் வேலையிழந்த தொழிலாளர்கள் பலர் வாகனங்கள் இல்லாததால் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் சுமைகளை முதுகில் சுமந்து கொண்டு தாவி தாவிச் செல்லும் தண்டனை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.