கரோனா பரவலைத் தடுக்க வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு 2 மாத ரேஷன் பொருட்களை முன்னதாகவே வழங்க முடிவுசெய்துள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ள கரோனா வைரஸ் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்ததோடு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலிவாங்கியுள்ளது.
இந்தியாவில் மெல்லக் காலூன்றத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ் தாக்கத்தை விரட்டியடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி முடுக்கிவிட்டுள்ளார். இதற்காக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவியுள்ள போதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஒரு கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியும் இல்லை. எனினும் இனியும் கரோனா பாதிப்பு நோயாளி யாரும் உருவாகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜார்க்கண்ட் அரசும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ராஞ்சி துணை ஆணையர் ராய் மஹிமபத் ரே கூறுகையில், ''பல நாட்கள் நீடிக்கும் அளவுக்கு போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருக்கிறது. மிகக் குறைந்த ஒழுங்கான விலைகளில் இப்பொருட்கள் வழங்கப்படும். அத்தியாவசியப் பொருட்களுக்கான வீட்டு விநியோகச் சேவையையும் நிர்வாகம் தொடங்கியுள்ளது'' என்றார்.
21 நாள் ஊரடங்கு உத்தரவை மக்கள் மிகச் சரியாக பின்பற்றும் வகையில் அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்.
இதுகுறித்து இன்று ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
''ஜார்க்கண்டில் இதுவரை யாருக்கும் கோவிட் நோய் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனினும் இனியும் இந்நோய் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும்.
பொது விநியோக ரேஷன் முறையின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் முன்கூட்டியே 2 மாத ரேஷன் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலத்தில் சுமார் 90% குடும்பங்கள் பயனடைவார்கள்.
உங்கள் மகன் அல்லது சகோதரனான நான் தொடர்ந்து உதவுவேன்''.
இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.