கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் இருப்போருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையை கரோனா சிகிச்சைக்காக மேற்கு வங்க அரசு மாற்றி வருகிறது.
இதற்காக கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வேறு மருத்துமனைக்கு மாற்றப்படுகின்றனர். சில நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். புதிதாக எந்த நோயாளிகளையும் சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள சூழலில் அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் இறந்தள்ளார். கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில், கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையை கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மேற்கு வங்க அரசு மாற்றியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றுகிறோம். அதற்காக அந்த மருத்துவமனைக்கு புதிதாக நோயாளிகள் யாரையும் சேர்க்கவில்லை. சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை, வீட்டுக்கு அனுப்பி வருகிறோம். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கும், கர்ப்பணிப் பெண்களுக்கும் மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறோம்.
இந்த மருத்துவமனையில் 2,200 படுக்கைகள் உள்ளன. இதை முழுமையாக கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காகவும், சுய தனிமைக்காக வருவோருக்கும் வழங்கப்பட உள்ளது. கரோனா வைரஸைத் தடுக்கும் எங்களின் முயற்சியில் இது முக்கியமானதாகும்” எனத் தெரிவித்தார்.