ரயில் சேவை ரத்து செய்யப் பட்டுள்ள போதிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இந்த மாதம் முழு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் துப்புரவு, சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது.
எனவே, அவர்கள் அனைவரும்ரயில் சேவை மீண்டும் தொடங்கும் வரையில் பணியில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். இதன்படி, அவர்களுக்கு மார்ச் மாதத்துக்கு முழு சம்பளமும் கிடைக்கும் வகையில் அதற்கான தொகை விடுவிக்கப்படும்.
ஆட்குறைப்பு கூடாது
மேலும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி, ரயில்வே மண்டல அலுவலகங்கள் ஒப்பந்தப் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.- பிடிஐ