நாடு முழுவதும் முழு அடைப்பு அமலில் உள்ள நிலையில், பொது மக்கள் துல்லியமான தகவலை பெறுவதற்காக, ஊடகங்கள் தடையின்றி செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் எனமாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம்அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், நம்பகமான தகவலை உரிய நேரத்தில் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், செய்தி நிறுவனங்கள், டிடிஎச், கேபிள் ஆப்பரேட்டர்கள், பண்பலை வானொலி மற்றும் சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளிட்டவற்றின் சேவை மிகவும் அவசியம்.
எனவே, கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், முக்கியமான தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக மேற்கண்ட ஊடக நிறுவனங்கள் முறையாக செயல்பட வேண்டியது அவசிய மாகிறது.
மேலும் தவறான மற்றும் போலியான தகவல் பரவுவதைத் தடுக்க வேண்டியது அவசியம். இதை உறுதி செய்வதில் இந்த ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
இந்த இக்கட்டான தருணத்தில்,நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் தடையின்றி தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஊடக துறையினர் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செய்தியாளர்கள், நாளிதழ் விநியோகிப்பாளர்கள் வாகனங்களில் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
கடந்த 19-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்நரேந்திர மோடி, ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார். அதேநேரம், ஊடகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள் பாதுகாப்பானது
மகாராஷ்டிர அரசின் தொழில்நுட்ப ஆலோசகர் (தொற்று நோய்) டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறும்போது, “கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்கூட செய்தித்தாள்கள் வெளியாகின்றன. செய்தித்தாள்கள் பாதுகாப்பானவை. அவற்றைத் தொட்டு படிப்பதால் கரோனா வைரஸ் பரவாது” என்றார்.
முன்னணி நாளிதழ்கள் அச்சாவது முதல் கட்டுகளாக கட்டப்படுவது வரை தானியங்கிஇயந்திரங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு கையுறை அணிந்த பணியாளர்கள் விநியோகம் செய்கின்றனர். இதனால் வைரஸ் பரவாது என செய்தித்தாள் நிறுவனங்கள் சார்பில் சொல்லப்படுகிறது.
மேலும், செய்தித்தாள்களை தொடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவாது என வைரஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிரற்ற பொருட்களைத் தவிர மற்றவற்றின் மீது கரோனா வைரஸ் நீண்ட நேரம் உயிர் வாழ்வது சிரமம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறும்போது, “நாளிதழ்கள் உட்பட உயிரற்ற பொருள்கள் மீது வைரஸால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க முடியாது” என்றார்.