கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஏழை- எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா குடும்பத்தினர் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தொழில் முடக்கத்தால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கால் சிறு வர்த்தகர்களும், தெருவோரங்களில் கடை வைத்துள்ளவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களுக்கு மாநில அரசுகள் நிதியுதவியை அறிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள், தனிநபர்களும் தானாக முன்வந்து நிதியுதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்தினர் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.
சத்யா நாதெள்ளாவின் மனைவி அனுபமா வேணுகோபால் இந்த நிதியை வழங்கியுள்ளார். அவரது தந்தை வேணுகோபால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை இன்று சந்தித்து 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
1967 -ம் ஆண்டு பிறந்த இந்திய அமெரிக்கரான சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவர். மைக்ரோசாப்ட்டின் முக்கியப் பொறுப்புகளில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.
இவர் எழுதிய “ஹிட் ரெஃப்ரஷ்” என்னும் புத்தகம் பெரும் புகழ்பெற்றது. இது ஆங்கிலம் தவிர ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற டைம் நாளிதழ் வெளியிடும் உலகின் செல்வாக்குமிக்க நூறு நபர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உலகையே திரும்பிப்பார்க்க வைத்த புகழ்பெற்ற இந்தியர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.