கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ரயில்வே சேவை 31-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதால் கவலையில் இருக்கும் லட்சக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் மார்ச் மாதத்துக்கான முழு ஊதியமும் தரப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தின் கடைசி ஒருவாரம் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்று கவலையில் இருந்தார்கள். அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையி்ல் இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்தைத் தொடர்ந்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொண்டன. அதில் முக்கியமாக மக்கள் கூட்டம் சேரவிடாமல் தவிர்க்கும் வகையில் ரயில் போக்குவரத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில் மார்ச் மாதம் இறுதி வாரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும் ரயில்வே துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு முழு ஊதியமும் தரப்படும் எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக துப்புரவுப் பணிகள், உதவியாளர்கள், வர்த்தகப் பணிகள், ரயில்களில் கேன்டீன் சேவை ஆகியவற்றில் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எந்த ஊதியப் பிடித்தமும் இருக்காது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், ''ரயி்ல்வேயில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், வெளி்ப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ரயி்ல் சேவை நிறுத்தப்பட்டதால் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.
ரயில்வே நிலையங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் கவலையடைந்துள்ளார்கள். ஆதலால், ரயில் சேவை நிறுத்தப்பட்ட இந்தக் காலகட்டத்திலும் அவர்கள் வேலையில் இருந்ததாகவே கருத்தில் கொள்ளப்படும். மத்திய அரசு அறிவுரைப்படி ரயில் ரத்து செய்யப்பட்ட காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்தவிதத்திலும் ஊதியப் பிடித்தம் இருக்காது என்பதை மண்டல அதிகாரிகள் ஊழியர்களிடம் தெரிவிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.