கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலி்ல் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு உரையாரற்றுகிறார்.
உலக அளவில் நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை நெருங்கிவிட்டது. 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்தினார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மார்ச் 24-ம் தேதி இன்று இரவு 8 மணிக்கு கரோனா வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்