இந்தியா

கரோனா அரக்கன்: இந்தியாவில் பாதிப்பு 500 பேரை நெருங்குகிறது; 9 பேர் பலி

பிடிஐ

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது, இந்தியாவி்ல் கரோனா வைரஸின் பாதிப்பு 500 பேரை நெருங்குகிறது, இதுவரை 9 பேரின் உயிரைக் குடித்துள்ளது கரோனா அரக்கன்.

கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் சமூகஇடைவெளியை உண்டாக்கும் வகையில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில், “ இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492 பேராக அதிகரித்துள்ளது. இதில் 41 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் இருவர், பிஹார், கர்நாடகா, டெல்லி, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் சேர்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் கரோனா வைரஸால் குணமடைந்து சென்றனர்.

கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர்கள் உள்பட 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகாராஷ்டிாாவில் 87 பேர், கர்நாடகாவில் 37 பேர், ராஜஸ்தானில் 33 பேர், உத்தரப் பிரதேசத்தில் 33 பேர், தெலங்கானாவில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டெல்லியில் 31 பேர், குஜராத்தில் 33 பேர், ஹரியாணாவில் 26 பேர், பஞ்சாபில் 21 பேர், லடாக்கில் 13 பேர், தமிழகத்தில் 12 பேர் பாதி்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சண்டிகரில் 6 பேர், ஜம்மு ஜாஷ்மீரில் 4 பேர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசத்தில் 3 பேர், பிஹார், ஒடிசாவில் தலா 2 பேர் ,புதுச்சேரி, சத்தீஸ்கரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT