கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சைக்கான மருத்துவமனைக் கட்டிடங்கள் தேவைப்படும்.
இதனை தங்களால் விரைவில் பூர்த்தி செய்து தர முடியும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியுடன் வர்த்தகத் தலைமைகள் நடத்திய வீடியோ மாநாட்டில் இதனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கோவிட்-19-ஐத் தடுக்க 10 நாட்களில் 2300 மருத்துவமனைகளை சீனா கட்டியது, அதே போல் தங்களால் முடியும் என்று எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்&டி தலைமைச் செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.என்.சுப்ரமணியன் தி இந்து ஆங்கிலம் நாளிதழிடம் கூறும்போது, நிறுவனத்தின் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை பிரிவு 50-100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளைக் கட்டித் தர முடியும் என்று தெரிவித்துள்ளது, இதனை 3-4 மாதங்களில் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தில் உள்ள கட்டிடக் கட்டுமானக் குழுவிடம் திட்டங்களும் மாதிரிகளும் தயாராக இருப்பதாகவும் உறுதியளிக்கப்பட்ட காலத்துக்குள் கட்டிடம் கட்டப்பட முடியும் என்று எல்&டி தெரிவித்துள்ளது
அதே போல் ஏற்கெனவே இருக்கும் திருமண மண்டபங்கள் உள்ளிடட் கட்டிடங்களையும் தேவையான உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளாக தங்களால் மாற்ற முடியும் என்று எல்&டி தெரிவித்துள்ளது.