பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு  8 ரூபாய் உயர்த்திக் கொள்ள அரசுக்கு அனுமதி

பிடிஐ

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாய் வரை எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு சட்டத்தித்திருத்தம் கொண்டுவந்து மக்களவையில் இன்று நிறைவேற்றியது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் இன்றுடன் முடிக்கப்பட்டது. முன்னதாக நிதிமசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எந்தவிதமான விவாதங்களின்றி நிறைேவறியது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு திருத்தங்களுடன் நிதிமசோதாவை தாக்கல் செய்தார். இதன்படி எதிர்காலத்தில் பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரியை லிட்டருக்கு 18 ரூபாயும், டீசலில் 12 ரூபாயும் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின் படுவீழ்ச்சி அடைந்து பேரல் ரூ.36 டாலராகக் குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டு வந்தது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 36 டாலராகக் குறைந்த நிலையில், பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 3 ரூபயை கடந்த இருவாரங்களுக்கு முன் உயர்த்தியது. இதன் மூலம் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கிடைக்கும்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.1.50 பைசா குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது .
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 9 முறை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் விலைச் சரிவைக் கச்சா எண்ணெய் சந்தித்தபோதெல்லாம், அந்தப் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல், மத்திய அரசு வரியாக எடுத்துக்கொண்டது.

இப்போதுள்ள சூழலில் கலால்வரி உயர்த்துவது குறித்து மத்திய அரசு எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT