இந்தியா

கேரளாவில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

செய்திப்பிரிவு

கரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று நள்ளிவரவு முதல் மார்ச் 31-ம் தேதி வரை முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்து நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையி்ல மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு இதுவரை இந்தியாவில் 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.கேரளாவில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று நள்ளிரவு முதல் மார்ச் 31-ம் தேதி வரை முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து, கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கி இருக்க வேண்டு எனவும் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களுககு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மாநில எல்லை மூடி சீல் வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT