கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக காப்பீடு ப்ரீமியம் தொகையை உரிய ேததியில் செலுத்த முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள்,3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தபோதிலும் கூட பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் இதுவரை 390 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பால் எல்ஐசி காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காப்பீடு ப்ரீமியம் கட்டணத்தை உரிய தேதியில் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்காக புதிய சலுகையை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுப்பட்டிருப்பதாவது: “ கரோனா வைரஸ் நோய் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளோம்.
அதன்படி, பாலிசிதாரர்கள் அனைவரும் தங்கள் பாலிசியின் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசமாக ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைனில் செலுத்த முடியாத வாடிக்கையாளர்கள், முகவர்களிடம் வழங்க முடியாத வாடிக்கையாளர்கள், இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்” இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது