இந்தியா

19 இந்திய மாணவர்கள் பிரிட்டனில் பரிதவிப்பு- இந்திய தூதரகத்துக்கு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் கல்வி பயிலும் 19 இந்திய மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உதவி கோரியுள்ளனர்.

பிரிட்டனில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச விமான போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், பிரிட்டனில் கல்வி பயிலும் சுமார் 59 மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதில் 40 மாணவர்களுக்கு பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் அடைக்கலம் அளித்துள்ளனர். ஆனால் இதர 19 மாணவர்கள் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு விரும்புகின்றனர். அவர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உதவி கோரியுள்ளனர். தங்களை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அதுவரை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க இடம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு மாணவர் கூறும்போது, ‘‘எனது விசா மார்ச் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் 23-ம் தேதிக்குள் நான் இந்தியா திரும்ப வேண்டும். ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனக்கு இந்திய தூதரகம் உதவ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற மாணவர்களுக்காக விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன.

கரோனா வைரஸை தடுக்க வெளிநாட்டு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT