இந்தியா

75 மாவட்டங்கள் முடக்கம்; என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள்? - மாநில அரசுகளுக்கு மத்திய  அரசு கடிதம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அதற்கான பொறு்பபு வகிக்கும் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கெளபா கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மத்திய அரசு இன்று எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக கரோனா தொற்று உள்ளோர் அதிகம் உள்ள 75 மாவட்டங்களை மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நாடுமுழுவதும் கரோன வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்களில் எடுக்கப்பட வேண்டிய கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அதற்கான மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கெளபா கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தந்துள்ள அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன. இதன் அடிப்படையில் சர்வதேச பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் கரோனா பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தி வைக்கப்படும் நபர்களுக்கான வசதிகள், சோதனைகள், தொடர்புகளை கண்டறியும் நடவடிக்கை, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கை வழிகாட்டுதலின்படி எடுக்கப்படுகின்றன.

2) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சற்று கூடுதலாகி வரும் நிலையில் கூடுதலாக மேலும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதை அறிந்தீருப்பீர்கள். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்களுடன் இன்று நடந்த கூட்டத்தில் இதுவே முக்கியமாக விவாதிக்கப்பட்டது. உடனடியான தேவைகள், உடனடியாக செய்யப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பல்வேறு மாநில அரசுகள் 1897-ம் ஆண்டு கொள்ளை நோய் தடுப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் செய்து வருவது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அத்தியாவசிய தேவை அல்லாதவற்றுக்கு தடை, மக்கள் கூடுவதை தடுத்தல், சமூகத்தில் இருந்து தனித்து இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

3) இன்றையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி, அனைத்து மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக அதிகமான கரோனா வைரஸ் தொற்றுவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்கள், கண்காணிப்பில் இருப்பவர்கள் அதிகமுள்ள மாவட்டங்களி்ல் இந்த சட்டத்தின் கீழ் தீவிரமான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். அதேசமயம் மருத்துவமனை, தொலைத்தொடர்பு, மருந்து கடைகள், பலசரக்கு கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

சானிட்டைசர்ஸ், முககவசம், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. தேவையற்ற பயணங்களை முழுமையாக தடுக்க வேண்டும். போக்குவரத்து சேவைகளையும் மிக குறைந்த அளவிலேயே வழங்க வேண்டும்.

புறநகர் ரயில் உள்ளிட்ட ரயில் சேவை, மெட்ரோ ரயில் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைப்பது என ரயில்வே வாரியம், வீட்டு வசதி வாரியம், நகர்புற மேம்பாட்டு துறைகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. அத்தியாவசி பொருட்களை ஏற்றிச் செல்ல சரக்கு ரயி்ல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

4) மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என பிரதமர் மோடி விடுத்த அழைப்புக்கு மக்கள் பெரும் ஆதரவு தந்துள்ளனர். மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணிவரை தொடருவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்த வேண்டும்.

மக்கள் ஊரடங்கும் ஏற்படுத்தியுள்ள சூழல் மேலும் தொடரும் வகையில் மாநிலங்களின் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். ஏழைகள், தினக்கூலிகள், கூலித்தொழிலாளர்கள், உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களி்ன் நிலையை கவனத்தில் கொண்டும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும.

5) தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த காலத்திற்கான உரிய சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும்.

6) கரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கு ஏற்ப தனிமைப்படுத்துதல், தனி மருத்துவ வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்து கொடுக்கும் வகையில் இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டோரை கையாளும் வகையிலான மருத்துவமனைகளை தற்போதே அடையாளம் காண வேண்டும்.

தேவையான சோதனைகளை செய்யும் அளவுக்கு தனியார் மருத்துவமனைகள் பரிசோதனை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடும் அனுமதியும் வழங்குவது உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

7) தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் உங்களின் முழுமையான மனமார்ந்த ஆதரவை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT