இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள்: மம்தா பானர்ஜி அறிவிப்பு 

செய்திப்பிரிவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.

இதபோல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுபற்றி அரசு அறிவிப்பு ஏதும் செய்யவில்லை.

இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அக்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் சொந்த தொகுதிக்கு சென்று மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமின்றி கட்சித் தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT