இந்தியா

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாய்ந்த புலி: பெண் மரணம்; பொதுமக்கள் தர்ணா

ஐஏஎன்எஸ்

உ.பி.யில் இந்த ஆண்டில் 3வது முறையாக நடைபெறும் சம்பவத்தில் 50 வயது பெண்மணி ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அங்கு பதுங்கி வந்த புலி அவர் மீது பாய்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இவர் வேலை செய்யும் வயலிலிருந்து 150 மீ தூரத்தில்தான் பிலிபிது புலிகள் சரணாலயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கடந்த மாதம் 60 வயது நபர் பூல் சந்த் என்பவர் பைஜுங்கர் கிராமத்திலும் ரூப் லால் என்ற 45 வயது நபர் விதிபுர் கிரமத்திலும் புலி தாக்கி பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை பலியானவர் மலா கிராமத்தைச் சேர்ந்த ரமோனி சர்க்கார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

புலி தாக்கியதையடுத்து அந்தப் பெண்மணி அலறியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வயல்களில் வேலை செய்தவர்கள் இவரைக் காப்பாற்ற வந்தனர், கூட்டத்தைப் பார்த்த புலி மீண்டும் காட்டுக்குள் சென்று மறைந்தது.

கழுத்தில் பெரிய காயங்களுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்தார். புலிகளிடமிருந்து பாதுகாப்பு கோரி பொதுமக்கள் தர்ணா செய்ததில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

5 காவல் நிலையங்களிலிருந்து போலீஸ் படைகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டன. மனித எல்லைக்குள் புலிகள் வராமல் தடுக்க மின்சார ஒயர் போடப்பட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கான உறுதி அளிக்கப்பட்டவுடன் போக்குவரத்தை மக்கள் மீண்டும் தொடங்க அனுமதித்தனர். புலி தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT