லக்னோ மருத்துவமனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் அங்கு ஓவராக ‘பந்தா’விடுவதாக மருத்துவர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
இந்நிலையில் கனிகா சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே.திமான் விடுத்துள்ள அறிக்கையில் “மருத்துவமனையில் உள்ள சிறப்பான வசதிகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன, அவர் நோயாளியாக நடந்து கொள்ள வேண்டு, லக்னோவில் வந்து தான் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதற்கான குழந்தைத் தன பிடிவாதங்களையும் ஆத்திரங்களையும் இங்கு காட்டக்கூடாது.
அவருக்கு குளூட்டன் இல்லாத உணவு, தனியறை அதில் குளிர்சாதன வசதி, டிவி, தனி கழிவறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன, அவருக்கு அவரே உதவி செய்து கொள்ள கனிகா கபூர் முதலில் நோயாளியாக ஒத்துழைக்க வேண்டும்.
அவர் மீது மிகுந்த அக்கறையுடன் சிகிச்சை அளித்து வருகிறோம், அவர் நோயாளி போல் நடந்து கொள்ள வேண்டும், நட்சத்திரம் போல் அல்ல” என்று கூறியுள்ளார்.
தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் வசதிகள் போதவில்லை, தூசியாக உள்ளடு, கொசுக்கள் கடிக்கின்றன என்று குற்றம்சாட்டினார் கனிகா கபூர், அதற்குத்தான் இயக்குநர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இதற்கிடையே கனிகா கபூர் கலந்து கொண்ட விருந்தில் பங்கேற்ற உ.பி. சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
விருந்தில் கலந்து கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட மற்ற 28 பேருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.