இந்தியா

ஆன்லைனில் மது விற்பனை கோரியவருக்கு அபராதம்- கேரள உயர் நீதிமன்றம் விதித்தது

செய்திப்பிரிவு

கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், மக்கள் கூட்டமாக சேருவதை தடுக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே, ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஷ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், கரோனா வைரஸ் பரவி வருவதால், வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, கேரள அரசு மதுபானக் கழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யக் கோரினேன். அதற்கு பதில் வரவில்லை. எனவே, வீட்டுக்கே அனுப்பிவைக்கும் வகையில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வதற்கு கேரள மதுபானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், மாநிலம் முழுவதும் மக்கள், கரோனா வைரஸ் பாதிப்பு பயத்தில் இருக்கிறார்கள். நாங்களும் நீதிமன்றத்தில் அதிக வழக்குகளை விசாரிக்க முடியாமல் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் இப்படியொரு மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்திருக்கிறார் இந்த மனுதாரர். எனவே, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த மனுவை வாபஸ் பெற மனுதாரர் முயன்றார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது - பிடிஐ

SCROLL FOR NEXT