மும்பை பகுதியில் வேனைக் கடத்தி ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தப்பிய டிரைவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மால்கா-அமித் ஜே.கே. லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரிகளிடம் இருந்து தங்க நகைகள், வைரங்கள் அடங்கிய பார்சல்களை பெற்று மும்பை பகுதி கடைகளுக்கு விநியோகம் செய்வது வருகிறது.
வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவன ஊழியர்கள், குஜராத் வியா பாரிகளிடம் இருந்து 3.5 கிலோ தங்க நகைகள் அடங்கிய 2 பார்சல்கள் மற்றும் வைரங்களை பெற்றுக் கொண்டு மும்பைக்கு வேனில் சென்றனர். அந்த நகைகள் மற்றும் வைரங்களின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
வேனை உதயபான் சிங் என்பவர் ஓட்டி னார். பின் பகுதியில் 2 ஊழியர்கள், ஒரு பாதுகாவலர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.
பிற்பகல் 3.45 மணிக்கு மும்பை புறநகர்ப் பகுதியில் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டயர் பஞ்சராகிவிட்டது என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் டிரைவர் உதயபான் சிங் வேனை நிறுத்தியுள்ளார்.
அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர் திடீரென நாட்டுத் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேனை சூழ்ந்து கொண்டனர். வேனில் இருந்த 4 ஊழியர் களையும் கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்திரி ஒட்டினர். பின்னர் வேன் டிரைவர் உதயபான் சிங்கும், அந்த 5 பேரும் விராலி பகுதிக்குச் சென்றனர்.
அங்கிருந்து அவர்கள், தங்க நகைகள், வைரங்களுடன் வேறு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். சாலையோரம் வேனுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஊழியர்களை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் உதயபான் சிங் குறித்து விசாரித்தனர். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்க நகைகள், வைரங்களை அவர் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார்.
“டிரைவரின் பின்னணி குறித்து விசாரிக் காமல் அவரை சம்பந்தப்பட்ட நிறுவனம் பணியில் அமர்த்தியது மிகப் பெரிய தவறு” என்று போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.