நாவல் கரோனா வைரஸ் அசாம் மாநிலத்தில் முதல் தொற்றை உருவாக்கியுள்ளது. ஜோர்ஹட் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமிக்கு முதற்கட்ட சோதனையில் கரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை உதவி ஆணையர் ரோஷ்னி அபராஞ்சி கொராதி கூறும்போது ஜோர்ஹட் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் இந்த சிறுமியின் சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டதில் அதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
ஆனால் இரண்டாம் கட்ட ஆலோசனைக்காக சாம்பிள்கள் மீண்டும் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-ஆர்.எம்.ஆர்.சி சோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு என்ன என்பது திங்கள் மதியம் தெரியும் என்கிறார் உதவி ஆணையர் ரோஷ்னி.
இந்தக் குடும்பத்தினர் சமீபமாக பிஹாரிலிருந்து ரயிலில் ஜோர்ஹட்டில் உள்ள மரியானிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் ரிப்போர்ட் செய்யப்பட்ட கேஸ்கள் 332 ஆக அதிகரித்துள்ளது. 305 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது, பொதுவாகவே இத்தகைய காலக்கட்டங்களில் பிரயாணங்களையும், சமூக நிகழ்ச்சிகளையும், வைபவங்களையும் தவிர்ப்பது நல்லது.