இந்தியா

கரோனா எதிர்ப்பு;சார்க் நிதி: தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

செய்திப்பிரிவு

சார்க் நிதிக்காக பணம் வழங்க முன் வந்துள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் குறித்த பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது, அதிலிருந்து மீள்வது, தயாராவது குறித்து சார்க் நாடுகள் ஆலோசிக்க வேண்டும், ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் காணொலிக் காட்சி மூலம் இணைந்து பிரதமர் மோடியுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த காணொலிச் சந்திப்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். இதற்காக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர்கள் இந்தியா சார்பில் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சார்க் நாடுகளின் தலைவர்களும், தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக நிதி அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். மாலத்தீவு சார்பில் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷேரிங் ஒரு லட்சம் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். நேபாளத்தின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் நிதிக்காக பணம் வழங்க முன் வந்துள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இன்று நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான போராடத்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT