இந்தியா

128 ஆண்டுக்கு பிறகு வெறிச்சோடிய திருமலை

என்.மகேஷ்குமார்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 128 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கூட்டமின்றி திருமலை வெறிச்சோடியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இவர்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

இதனால் திருமலையில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையம்மட்டுமின்றி தங்கும் அறைகளுக்காகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அலிபிரி மலைப்பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் திருமலைக்குச் செல்ல காத்திருப்பதை காலை முதல் இரவு வரை காணமுடியும். தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடி வழியாக திருமலைக்கு செல்வதுவழக்கம். தரிசனம் முடிந்தபின் பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப திருமலையில் பஸ் நிலையங்களில் காத்திருப்பது வழக்கம்.

மேலும் முடி காணிக்கை செலுத்தும் இடம், விடுதிகள், அன்னதான மையம், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் போன்ற அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம்அலைமோதும். திருமலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் 24 மணி நேரமும் பக்தர்களின் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழுமலையான் கோயிலில் ஒரு வாரம் வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் நேற்று நண்பகல் 12 மணி வரை திருமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தவர்கள் என அதிகாரிகள் கூறினர்.

நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை முதல் தோமாலை, அபிஷேகம், அர்ச்சனை என அனைத்து சேவைகளும் சுவாமிக்கு நடந்தன. இதில் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கம்போல் சுவாமிக்கு நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இரவு ஏகாந்த சேவைக்கு பின் கோயில் நடை அடைக்கப்பட்டது.

கடந்த 1892-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 2 நாட்கள் அடைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் அலிபிரி, மலைப்பாதை, திருமலை பஸ் நிலையம்,அன்னதான மையம், முடிகாணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட பல இடங்களும் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

SCROLL FOR NEXT