நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு நடந்த உடற்கூறு ஆய்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
3 டெத் வாரண்ட்டுகளுக்குப் பின் 4-வது டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று திஹார் சிறையில் அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் 30 நிமிடங்கள் வரை 4 பேரின் உடல்களும் தொங்கவிடப்பட்டு பின்னர் அகற்றப்பட்டன. எ பேரின் உடல்களை மருத்துவர் ஆய்வு செய்து, உயிர் பிரிந்துவிட்டது என்று அறிக்கை அளித்தபின் அவர்களின் உடல்கள் தீனதயால் உபாத்யாயா மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மருத்துவமனையில் மருத்துவர் பி.என்.மிஸ்ரா, தலைமையிலான வி.கே.ரங்கா, ஜதின் வோட்வால், ஆர்.கே.சவுபே, அஜித் ஆகிய மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
வழக்கமான உடற்கூறு ஆய்வுக்கும் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்களுக்கும் உடற்கூறு ஆய்வு செய்வதில் வேறுபாடு இருக்கிறது.
இதுகுறித்து மருத்துவர் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், "குற்றவாளிகளின் 4 பேரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு 4 மணிநேரம் முதல் 5 மணிநேரம் தேவைப்பட்டது. அனைத்து ஆய்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் சிக்கி இறந்தவர்கள் ஆகியோருக்குக் கடைப்பிடிக்கும் உடற்கூறு முறையில் பொதுவான அம்சங்கள் இருக்கும். ஆனால், சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளின் உடற்கூறு ஆய்வு முற்றிலும் வேறுபாடானது.
அனுபவமான ஹேங்மேன் ஒருவர் தூக்கு தண்டனையைக் கைதிக்கு நிறைவேற்றும்போது, கழுத்து எலும்புகள் வித்தியாசமாக நொறுங்கும். அதுவே, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவரின் கழுத்தில் எலும்புகள் நொறுங்கியதற்கும் வித்தியாசம் இருக்கும்.
மேலும், சிறையில் தூக்கிலிடப்பட்டவுடன் அவரின் மூளை ஸ்டெம் உடனடியாக முழுமையாகப் பரிசோதிக்கப்படும். சிறையில் தூக்கிலிடப்படுவோருக்கு அவரின் கழுத்து எலும்புகள் உடனடியாக முறிந்து மயக்கநிலைக்கு உடனடியாகச் செல்வார். அதன்பின் சில வினாடிகளில் அவர் மரணித்துவிடுவார்.
சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்வோம். அதாவது இறந்தவரின் இதயத்தைக் குறிப்பாக ஆய்வு செய்வோம். தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் அடுத்த 15 முதல் 20 நிமிடங்களுக்குக் கைதியின் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு நடந்தால், முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அர்த்தம்" எனத் தெரிவித்தார்.