வடகிழக்கு மாநிலத்தில் பிறந்து, மிகக் குறைந்த காலகட்டத்தில் வர்த்தக நகரான மும்பை வரை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தவர் இந்திராணி. ஒரு கட்டத்தில் உலகின் செல்வாக்கு மிகுந்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்தவர். இப்போது மகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் அரசு பொறியாளரின் மகள் இந்திராணி. கவுகாத்தியில் படிப்பை முடித்தார். அங்கு சித்தார்த் தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள் ஷீனா போரா, மைக்கேல் போரா. பின்னர் மேல்படிப்புக்காக குழந்தைகள், கணவரை விட்டுவிட்டு கொல்கத்தா சென்றார் இந்திராணி. அங்கு சஞ்சீவ் கண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் ஸ்டார் டிவியில் வேலை கிடைக்க, சஞ்சீவ் கன்னாவை பிரிந்து மகளுடன் மும்பையில் குடியேறுகிறார் இந்திராணி. அங்கு தலைமை செயல் அதிகாரியாக இருந்த பீட்டர் முகர்ஜியை 3-வது திருமணம் செய்து கொள்கிறார். 2 திருமணங்கள், குழந்தைகள் பற்றி பீட்டரிடம் தெளிவாக மறைத்து விட்டார். அதேசமயம், குழந்தைகளின் புகைப்படங்களை காட்டி அவர்கள் தனது தங்கை, தம்பி என்ற கதை விட்டுள்ளார். அதை பீட்டர் முகர்ஜியும் நம்பி உள்ளார்.
கவுகாத்தியில் இருந்து மும்பை வந்து மீடியாவில் செல்வாக்குள்ள ஒருவரை திருமணம் செய்ததன் மூலம் இந்திராணி பிரபலமானார். குறைந்த காலகட்டத்தில் பணம், செல்வாக்கு என்று வாழ்க்கை உச்சத்துக்கு போனது. ஆனால், அதே வேகத்தில் இந்திராணிக்கு சரிவும் ஏற்பட்டது. பீட்டரின் முதல் மனைவிக்குப் பிறந்த ராகுல், ஷீனாவை காதலித்தார். இது உறவு முறையில் சரியில்லாததால், இந்திராணி அதிர்ச்சி அடைந்தார். தனது தங்கை என்று கூறி தன்னுடன் தங்க வைத்திருந்ததால், உண்மையை பீட்டரிடம் சொல்லவும் முடியவில்லை. ஷீனாவை கடுமையாக கண்டித்தார்.
பலன் இல்லாததால் ஷீனாவை கொலை செய்து உடலை எரித்து புதைத்துவிட்டார். இது நடந்தது கடந்த 2012-ம் ஆண்டு. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது இந்திராணி சிக்கி உள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்தவர் பீட்டர் முகர்ஜி. தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழிலில் மிக வேகமாக முன்னுக்கு வந்தவர். அதன்பிறகு ஸ்டார் இந்தியா தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றார். இந்திராணியை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்த பிறகு இருவரும் சேர்ந்து ஐஎன்எக்ஸ் சர்வீஸஸ் என்ற பெயரில் கொல்கத்தாவில் தனியாக நிறுவனம் தொடங்கினர். அதற்கு தலைவர் இந்திராணிதான். பத்து பேருக்கும் குறைவானவர்கள் பணியாற்றிய மிகச் சிறிய நிறுவனம்தான் ஐஎன்எக்ஸ் சர்வீஸஸ். ஒப்பந்த தொழிலாளர்களை தேர்வு செய்வதுதான் இந்நிறுவனத்தின் வேலை என்கின்றனர்.
ஸ்டார் இந்தியா பணியை விட்டுவிட்டு ‘ஐஎன்எக்ஸ் மீடியா’வை தொடங்க பீட்டருக்கு ஐடியா கொடுத்தவரே இந்திராணிதான். ஆனால், மேற்கத்திய பாணியில் பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் தந்து வளர்ச்சி அடைந்ததுபோல ஐஎன்எக்ஸ் செயல்படவில்லை. அது ஒரு குடும்ப நிறுவனம் போல செயல்பட்டது. அனுபவம் இல்லாதவர்கள், இந்திராணிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டனர் என்று கூறுகின்றனர். மேலும், பீட்டர் - இந்திராணி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் இருந்துள்ளன. ஒரு கட்டத்தில் இந்திராணியை பீட்டரால் கட்டுப்படுத்த முடியாத நிலையும் இருந்துள்ளது.
ஒரு முறை விருது வழங்கும் விழா நடந்தது. அதில் அப்போதைய பிரதமர் உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சிக்கு பீட்டரும் இந்திராணியும் தாமதமாக வந்தனர். இருக்கையில் அமர்ந்த பின், பீட்டரிடம் இந்திராணி பேசிக் கொண்டே இருந்தார். அருகில் இருந்தவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்தார். பீட்டர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஆனால், இந்திராணியை அவரால் அமைதிப்படுத்த முடியவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் சர்வீஸஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட சிறிய நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல நிறுவனங்களை தன்னுடன் இணைத்து கொண்டது. இன்று ‘ஐஎன்எக்ஸ் எக்ஸ்சிகியூட்டிவ் அண்ட் செலக் ஷன்’ என்ற அளவில் பிரம்மாண்ட வளர்ச்சியுடன் உள்ளது. பல நிறுவனங்களுக்கு மிகத் திறமையானவர்கள் தேர்வு செய்து அளித்துள்ளது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த இணையதளத் தில்தான், உலகின் மிகச் செல்வாக்கு மிகுந்த 50 பெண்களில் ஒருவர் ஐஎன்எக்ஸ் நிறுவனர் இந்திராணி என்று கூறப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பின்னால் பீட்டர் முகர்ஜி மிக முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.
ஆனால், ஒரு கொலை இந்திராணியின் அசுர வளர்ச்சியை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இந்திராணியின் கடந்த கால வாழ்க்கையை அறிந்த பீட்டர், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார்.
சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுநரிடம் குற்றம் நடந்த இடத்தில் விசாரணை
மும்பை
இந்திராணி முகர்ஜியின் 2-வது கணவர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரையும் குற்றம் நடந்த ராய்கட் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரையும் கர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது இந்தி ராணியும், சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாந்த்ராவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ள இந்திராணியின் மகனும் ஷீனாவின் சகோதரருமான மைக்கேல் போராவிடமும் போலீஸார் நேற்று முன்தினம் தனியாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, சஞ்சீவ் கண்ணா மற்றும் ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் ஷீனாவின் சடலம் புதைக்கப்பட்ட ராய்கட் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, “ஷீனாவை கொலை செய்வதற்காக பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அந்தக் கார் பல நபர்களிடம் கைமாறி உள்ளது. எனினும் அந்தக் காரை இன்னும் பறிமுதல் செய்யவில்லை” என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கு பதியாதது ஏன்?
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷீனாவின் சடலத்தை பாதி எரிந்த நிலையில் கைப்பற்றிய போலீஸார், கொலை அல்லது விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராய்கட் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஷீனாவின் உடல் பாகங்கள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கும் என்று விசாரணைக்குழு நம்புகிறது. அதேநேரம், 2012-ம் ஆண்டு மே 23-ம் தேதி ஷீனாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது முறையான நடைமுறைகள் பின் பற்றப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராய்கட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுவெஸ் ஹக் அலிபாக் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஷீனாவின் சடலத்திலிருந்து சில பாகங்களைக் கைப்பற்றி ஜேஜே மருத்துவமனையில் ஒப்படைத்த போலீஸார், இதை கொலை என்றோ விபத்து மரணம் என்றோ பதிவு செய்யவில்லை” என்றார்.
இந்திராணி மற்றும் மைக்கேல் போரா ஆகியோரின் ரத்தம் மற்றும் தலைமுடி மாதிரியை சேகரித்து தடயவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு ஓரிரு தினங்களில் தெரியவரும்.
இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜியின் (முதல் மனைவியின்) மகன் ராகுல் முகர்ஜியிடமும் போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர். ராகுலும் ஷீனாவும் காதலித்து வந்ததாகவும் இதை விரும்பாத இந்திராணி, ஷீனாவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. -பிடிஐ