மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு மீது இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு சற்றுநேரம் முன்னதாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள்ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றும், காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் பாஜக எம்எல்ஏக்கள் அண்மையில் கடிதம் அளித்தனர்.
இதன்பேரில், சட்டப்பேரவையில் மார்ச் 16-ம் தேதி (கடந்த திங்கள்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே மார்ச் 26-ம் தேதி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று இறுதி வாதங்கள் நடைபெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதன்படி இன்று பிற்பகல் ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.