நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறியது குறித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தியதால், அவர்களின் தூக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இதற்கிடையே நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் ஒரே நேரத்தில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது நாட்டுப் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. பெண்கள் அதிகாரமளித்தலுக்கு முக்கியக் கவனம் செலுத்தும், சமத்துவத்துக்கும் வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்'' என்று மோடி தெரிவித்துள்ளார்.