தேசிய பாதுகாப்பு செயலர்கள் தரப்பு இந்திய-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை முயற்சிகள் சனிக்கிழமை இரவோடு முடிவுக்கு வந்தது. இந்தியா விதிக்கும் நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைகள் சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு செயலர் சர்தாஜ் அஜிஸ் இன்று டெல்லி வருவதாக இருந்தது. ஆனால் இருதரப்பிலும் கசப்பான கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து பேச்சு வார்த்தை நடைபெறுவது முடியாத விஷயமாகிப் போனது.
‘பயங்கரவாத சம்பவங்களை இட்டுக்கட்டி கட்டுப்பாட்டு எல்லை பகுதியை எப்போதும் சுடாக வைத்திருக்கிறது இந்தியா’ என்று பாகிஸ்தானும், 'எல்லையில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரவாதத் தாக்குதல் ஆகியவை மூலம் பேச்சு வார்த்தைகளை பாகிஸ்தான் தவிர்க்கிறது' என்று இந்தியாவும் பரஸ்பர குற்றச்சாட்டுகளில் இறங்கின.
பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம், உஃபா உணர்வை மீறிவிட்டது: சுஷ்மா ஸ்வராஜ்
பேச்சுவார்த்தைகளுக்கு ஹுரியத் தலைமையை அழைப்பதை வலியுறுத்துவதன் மூலம் சிம்லா ஒப்பந்தத்தையும் உஃபா உணர்வையும் பாகிஸ்தான் மீறியுள்ளது.
குறிப்பாக உஃபாவில் பிரதமர்கள் மட்ட சந்திப்பில் திட்டமிட்டது இருதரப்பு பேச்சு தீவிரவாதம் பற்றியே. இதனை விடுத்து காஷ்மீர் பிரச்சினையை உள்ளே நுழைப்பது இருநாட்டு தலைவர்களின் உஃபா சந்திப்பின் உணர்வு மீறலாகும். என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறி நேற்று நள்ளிரவு வரை பாகிஸ்தானுக்கு கால அவகாசம் அளித்தார்.
அதாவது அஜிஸ் கூறுவது போல் பேச்சு வார்த்தைகளுக்கு ‘முன் நிபந்தனைகள்’ எதையும் விதிக்கவில்லை, மாறாக உஃபாவில் ஒப்புக் கொண்டதன் படி பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளை விளக்கினோம்.
உஃபா ஒப்புதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். எனவே தேசிய செயலர் மட்ட பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை ஏதோ ஒரு முற்கோளில் அவர் உறுதியாக இருந்துள்ளார். பாகிஸ்தானின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது, இந்திய எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கவில்லை, என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.