உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் தொடர்ந்து பரவாமல் தடுக்க, நகரங்கள், பெருநகரங்கள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
கரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு கொடூரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
உலக நாடுகளின் சூழலைப் பார்த்து இந்திய அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளார்கள். 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் போதாது என்றும், இன்னும் தீவிரமான அதிரடியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரமும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், " இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட தகவலின்படி கரோனா வைரஸின் மூன்றாவது படிநிலை சமூக ரீதியாகப் பரவும் சூழல் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளது. அதற்கான உதிரி பரிசோதனையில் மூன்றாவது படிநிலை இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பாக மத்திய அரசு விழித்துக்கொண்டு, தற்காலிகமாக அனைத்து பெருநகரங்களையும், நகரங்களையும் 2-வது படிநிலைக்குள்ளாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு அறிவிக்கும் முன்பாக சில மாநிலங்கள் தாங்களாகவே தங்கள் மக்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகரங்களையும், நகரங்களையும் 2 அல்லது 4 வாரங்களுக்கு மூட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 அல்லது 4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும், பெருநகரங்களையும் மூடுவதில் எந்தத் தயக்கமும் காட்டாதீர்கள். உடனடியாக மூடிவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்" என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.