ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாததால் 2 வார காலம் அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர்.
இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆகக் குறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் ம.பி. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அவை மார்ச் 26-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ம.பி. சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாததால் 2 வார காலம் அவகாசம் தேவை எனக் கூறினார். ஆனால் இதற்கு சிவராஜ் சிங் சவுகான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.