ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கோவிட்-19 காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக, வளரும் உறுப்பு நாடுகளுக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
ஏடிபி தலைவர் மஸட்சுகு அசகவா கூறும்போது, “இந்த வைரஸ் தொற்று சர்வதேச அளவிலான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, தேசிய, பிராந்திய மற்றும்சர்வதேச அளவில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில், இந்த வைரஸ்பாதிப்பிலிருந்து ஏழை மக்களை பாதுகாப்பதற்காக, உறுப்பு நாடுகளுடன் இணைந்து சில வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். இது தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், உடனடி தேவைக்காக ரூ.48 ஆயிரம் கோடிஒதுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்” என்றார்.
ஆசிய வளர்ச்சி வங்கி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வது மற்றும் வறுமையை ஒழிப்பது ஆகியவைதான் இதன் நோக்கம் ஆகும்.- பிடிஐ