தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் கட்டணத்தை மறு மதிப்பீடு அல்லது சுய மதிப்பீடு செய்த மத்திய அரசையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.
எங்களை முட்டாள்கள் என்று நினைத்தீர்களா? இது எவ்வளவு பெரிய அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு தெரியுமா? என்று நீதிபதிகள் காட்டமாக மத்திய அரசையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கேள்வி கேட்டனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அந்த வகையில் பாரதி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து வோடஃபோன் -ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தனியே மனுத்தாக்கல் செய்தன. அம்மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 23-ம் தேதி அன்று நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் கால அவகாசம் கேட்டன.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டது. மார்ச் 17-ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இதில் வோடஃபோன் - ஐடியா 2 தவணைகளில் ரூ. 3,500 கோடி, ரூ.3,354 கோடியைச் செலுத்தியது. இதுவரை ஏர்டெல் ரூ.18,004 கோடி, டாடா குழுமம் ரூ.4,197 கோடியைச் செலுத்தியுள்ளன.
இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தை 20 ஆண்டுக்குத் தவணையில் செலுத்த மத்திய அரசு திட்டம் வகுத்தது. இதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ.நசீர், எம்.ஆர் ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் நிலுவைத் தொகையை வசூலிக்க 20 ஆண்டுகள் தவணை அளிக்க வேண்டும் எனக் கோரிய மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த மனுவை 2 வாரங்களுக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகையில் எதையும் குறைக்க முடியாது. தீர்ப்பை மாற்ற முடியாது என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் பேசியதாவது:
''ஏஜிஆர் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கடைசி வரை போராடிவிட்டு, இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் மத்திய அரசு தவணை கேட்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை திருத்தி சுயமதிப்பீடு செய்த தொலைத்தொடர்பு துறையின் அனைத்து செயலாளர்கள், டெஸ்க் அதிகாரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படும். எங்களை முட்டாள் என நினைத்தீர்களா? தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கனவுகளுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்ற முடியாது.
ஏஜிஆர் கட்டணத்தை சுய மதிப்பீடு செய்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமான மோசடி குற்றத்தைச் செய்துள்ளீர்கள். நாங்கள் அளித்த தீர்ப்புதான் இறுதியானது.
ஏஜிஆர் கட்டணத்தை மறு மதிப்பீடு செய்ய அனுமதித்தால், நீதிமன்றத்தின் கவுரவம் என்ன ஆவது? கட்டணத்தை மறு ஆய்வு செய்த, சுய மதிப்பீடு செய்த எந்த அதிகாரியையும் விடமாட்டோம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்ன இந்த பூமியிலேயே அதிகமான அதிகாரம் படைத்தவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி யாராவது அதிகாரம் படைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு எங் களை ஆதிக்கம் செய்ய நினைத்தால் அது தவறாகும்.
நாளேடுகளில் வரும் செய்திகள் மூலம் எங்களின் தீர்ப்புகளை மாற்ற முயலாதீர்கள். பொய்யான செய்திகளைப் பிரசுரித்தால் நீதிமன்றத்துக்கு அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களே பொறுப்பு''.
இவ்வாறு நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.