கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்து விதமான தேர்வுகள், போட்டித் தேர்வுகள் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் போர்க்கால நடவடிக்கையில் இறங்கிப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதில் குறிப்பாக மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஷாப்பிங் மால்கள் , திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உத்தரப் பிரதேச அரசும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 2-ம் தேதி வரை மூட உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிய அறிவிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி பாஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கான கூடுதல் செயலாளர் ரேணுகா குமார் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா வைரஸ் பரவுதல், அதற்கு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2-ம் தேதி வரை மூடப்படுகின்றன. அனைத்து விதமான தேர்வுகள், போட்டித் தேர்வுகள் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.