வயநாடு மாவட்டத்தின் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, கரோனா வைரஸ் சவாலை சமாளிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் அங்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவு செய்த கடிதத்தில் வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
''வைரஸ் பரவுவதைத் தடுக்க பொருத்தமான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
வயநாடு தொகுதிக்குச் செல்ல வேண்டுமென்று திட்டமிடப்பட்ட எனது பயணங்களை ஒத்திவைத்துள்ளேன், ஆனால் வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வயநாடு மாவட்டஆட்சியர் அடீலா அப்துல்லாவுடன் பேசினேன்.
கோவிட் -19 அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் நான் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நிலைமை மேம்படும் வரை நமது மக்கள் அனைவரும் தங்களது அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் தவிர்க்க வேண்டுமெனவும் நான் அறிவுறுத்துகிறேன்.
இந்தப் பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவை அவசியமானவை. இந்த வைரஸ் நோய்த் தொற்றுக்கு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய நாடுகள் இன்று கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டாவது நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
வயநாட்டில் கண்காணிப்பில் இருப்பவர்கள் விரைவில் நலமுடன் மீண்டு வரவேண்டுமென வாழ்த்துகிறேன். இதற்காக பணியாற்றிவரும் வயநாடு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் கடின உழைப்புக்கு நன்றி.
இந்தப் பொது சுகாதார அவசர நிலை நம் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கற்பனை செய்ய முடியாத வகையில் பாதித்துள்ளது. இதுபோன்ற சோதனை நேரங்களில், நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும்.
உலகின் தொடர்புகள் மிகவும் பெரிய அளவில் இணைக்கப்பட்டு வரும் இக்காலத்தில், நம்மையும் நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.