ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட் டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் இறந்ததை தொடர்ந்து அங்கு செல்ல முயன்ற பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார்.
புல்வாமா மாவட்டம், பட்கம்போரா என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் சிலர் கல்வீசித் தாக்கினர். இவர்களை எச்சரித்து விரட்டுவதற்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பிலால் அகமது பட் (23) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து புல்வாமா மாவட்டத்தில் நேற்று கடையடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். துப்பாக்கிச்சூட்டில் இறந்த இளைஞரின் கிராமத்துக்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் தனது ஆதர வாளர்களுடன் நேற்று செல்லமுயன்றார்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்டார்.